Friday, 29 June 2018
Thursday, 28 June 2018
Jagadeesh Krishnan
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,
“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.
“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.
அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!
கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”
“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான்.
பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.
“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”
வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.
இப்போது தரையை பார்த்தான்.
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.
அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.
*மிகப் பெரிய உண்மை
By
K. Jagadeesh
Saturday, 23 June 2018
Jagadeesh Krishnan psychologists and international Author
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.
யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.
ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.
அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
ஓரு மகன் சொன்னான்,
“நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான்.
“எப்படி?”
“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”
இன்னொரு மகன் சொன்னான்.
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.
“எப்படி?”
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.
அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.
ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
மூன்றாம் மகன் சொன்னான்,
“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.
“எப்படி?”
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.
அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.
அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”
அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.
மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம்.
சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும்.
அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.
முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.
ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது.
புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.
ஆனால்,
இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.
மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான்.
அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.
அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.
புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.
எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.
முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.
பார்வையை விரிவுபடுத்துங்கள்.
புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.
சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.
பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
"முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.
பார்வையை விரிவுபடுத்துங்கள் “
By
K. Jagadeesh
Thursday, 21 June 2018
Monday, 18 June 2018
Jagadeesh Krishnan psychologists and international Author
நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது.
அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார்.
கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.
தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள்.
மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம்.
இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று.
ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது.
ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.
தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, ”அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.
“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்!
அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை.
எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
இறைவனின் திருவுள்ளம்,இந்தப்
பெண்ணை, சோதிக்க எண்ணியது.
அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது.
அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.
இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள்.
ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.
இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.
இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.
இறைவா! நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும்,கடனை, திரும்பக் கேட்கிறார்கள்.
என்னால் கொடுக்க முடியவில்லை.
அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை.
அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.
ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.
”மகளே! கவலையை விடு.
இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார்.
அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார்.
“எனக்கு அவரை அறிமுகம் இல்லை.
நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள்.
அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை.
இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.
அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?.
எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,அக்கால கணக்கின்படி “ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது.
பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள்.
எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன்.
நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர்.
ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள்.
அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது.
ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும்.
எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார்.
நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம்.
ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன்.
ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய்.
ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா?
சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.
எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.
எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.
இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, ”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை.
உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன்.
காசி விஸ்வநாதர் மீது ஆணை.
எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள்.
“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான்.
இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன.
இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.
இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.
ஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய,பாவங்களை அல்ல.
ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.
கண்ணுக்குத் தெரியாதது.
உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.
“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன்.
தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.
சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது.
பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார்.
நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது.
ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”.“இல்லை. நம்புங்கள்.
சிவபெருமான் மீது ஆணை.
கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள்.
பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள்.
செல்வந்தர் யோசிக்கிறார்.
”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள்.
வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும்.
மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை.
அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம்.
ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.
அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன்.
என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள்.
எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை.
ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார்.
காலை மணி ஆறு ஆகிறது.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது.
அவ்வளவுதான். *குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.* அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது.
“ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்” என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார்.
எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைவரை தர்மம் செய்து வாழ்ந்தார்.
இது 300,400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.
இதை அகத்தியம்பெருமான், அடிக்கடி, அடியேனுக்கு நினைவூட்டி இருக்கிறார்.
எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?” என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.
எனவே, மெய்யன்பர்களே! இதைக் கதை என்று பார்க்காமல், நடந்த நிகழ்வு என்று சாக்ஷாத் அகத்திய பகவான் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
By
K. Jagadeesh