Saturday, 23 June 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.

ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான்,

“நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான்.

“எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.

இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான்.

“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.

ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான்,

“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.

“எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.

அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.

அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம்.

சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும்.

அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது.

புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால்,

இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான்.

அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.

அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.

புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள்.

புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.

சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.

பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

"முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள் “
By
K. Jagadeesh

No comments:

Post a Comment