“The Illustrated Weekly of India”-வில் வெளிவந்த ஜான் கணேஷுடனான பேட்டியில் ஜான் கணேஷ் முன்வைத்த விஷயங்களின் ஸாரம் பின்வறுமாறு:
“எனது குடும்பத்தின் வறுமையால் நான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தேன்.மக்களைக் கவரும் வண்ணம் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.கிறிஸ்தவ நெறிகளில் எனக்கிருந்த ஆழமான அறிவைக் கண்டு வியந்த ஆர்ச் பிஷப் அருளப்பா ஒருநாள் என்னை அன்புடன் அழைத்து என்னிடம், “கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஆழமான ஞானமுடைய உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டி உள்ளது.செயின்ட் தாமஸ் இங்கு வந்ததற்கும் அவர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்துவைத்தார் என்பதற்கும் ஆதாரங்களை நீ சேகரித்துத்தரவேண்டும்.இதை நீ செய்தால் உனக்கு சர்வ தேச அலவில் புகழும் நிறையப் பணமும் கிடைக்கும்” என்று கூறினார்.முதலில் நான் சற்றுத் தயங்கினேன்.தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப்பற்றிய பழமையான வரலாற்றுச்சின்னங்களோ ஏட்டுச்சுவடிகளோ இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.செயின்ட் தாமஸ் முதலாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தார் என்ற குறிப்பு சில நூல்களில் காணப்பட்டாலும் அந்த நூல்கள் குறிப்பிடும் செயின்ட் தாமஸும் ஏசுவின் சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸும் ஒருவர்தானா என்பது பற்றிய சந்தேகங்களுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு அங்கிருந்த விஷயம் தெரிந்த கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் “செயின்ட் தாமஸ் உண்மையிலேயே இந்தியா வந்தாரா என்பது குறித்துத் தெளிவான விளக்கத்தை நீங்கள் அளிக்கவேண்டும்”என்று கேட்டார்.அதற்கு அந்தப் பாதிரிமார்கள் புன்முறுவலைத்தவிர வேறு எந்த பதிலையும் அளிக்கவில்லை.ஏசுவின் சீடரான செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.அதனால்தான் புன்முறுவலை பதிலாக அளித்தார்கள் அந்தப் பாதிரியார்கள்.இந்த விஷயங்களை எல்லாம் நான் அருளப்பாவிடம் கூறினேன். அதற்கு அவர், “அப்படியானால் நாம் அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.பழங்காலப் பனை ஓலைகளிலும் செப்பேடுகளிலும் இருப்பதாக அறிவிக்க வேண்டும்.இப்படிச் செய்தால் நாம் நிலை நாட்ட எண்ணியிருக்கும் கருத்துக்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் என்ற போர்வையைப் போர்த்தி நமது கருத்துக்களுக்கு மேலும் வலிமை சேர்க்கலாம்”என்று கூறினார். இத்தகைய போலி ஆதார அவணங்களைத் தயாரிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை.ஆனால் எனது வறுமைச் சூழ்நிலை என் மனசாட்சியைப் புறந்தள்ளிவிட்டது.முடிவில் சம்மதித்தேன்.நானும் அவரும் சேர்ந்து செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் என்பதற்கும் அவர் திருவள்ளுவருக்கு ஞாநஸ்நாநம் செய்துவைத்தார் என்பதற்கும் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்பதற்குமான ஆதரங்களை தயாரித்தோம்.அவர் சொல்லச் சொல்லப் பழுப்பு நிறமுள்ள ஓலைகளில் எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடி எழுத்துக்களைப்போல் எழுதினேன்.பொருள் கொள்ள முடியாத அளவிற்கும் சில வரிகளை எழுதினேன்.இம்மாதிரிப் போலிச் சுவடிகளைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாகச் செய்யவேண்டியிருந்தது.இச்செயல் செய்யும்போது மன சாட்சி உறுத்தலால் என்மனம் கலக்க முற்றது.எனது நண்பர் சண்ட் யாகோ அவ்வப்போது எனது கலக்கத்தைப் போக்கிவந்தார்.இப்படி ஏராளமான சுவடிகள் தயாரிக்கப்பட்டன.பிறகு அவற்றைப் போலவே பழுப்புநிறக் காகிதங்களில் எழுதினேன்.அக்காகிதங்களை ஒரு அட்டையில் ஒட்டி போட்டோ எடுத்தேன்.பழங்கால ஓலைச்சுவடிகள் போல் காட்சியளிக்கும் இவற்றை ஓலைச்சுவடிகள்பற்றி அறியாதவர்களிடம் காட்டினால் அவர்கள் நம்பிவிடுவார்கள். இந்தப் போலி ஆவணத் தயாரிப்புக்காக நான் கேட்கும்போதெல்லாம் அருளப்பா ஆயிரமாயிரமாகப் பணத்தை அள்ளியள்ளி எனக்குக் கொடுத்தார்.”
ஜான்கணேஷின் இந்த தன்னிலைவிளக்க வாக்கு மூலத்திலிருந்து கிறிஸ்தவப் பாதிரியார்களின் சூழ்ச்சியையும் தங்களின் கருத்தை நிலைநாட்டப் போலி ஆதாரங்களைத் தயாரிக்கும் ஈனச்செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.ஜான் கணேஷ் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டிலிருந்த ஏராளமான போலி ஓலைச்சுவடிகளையும் ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றினர். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
ஜான் கணேஷை சந்திப்பதற்கு முன் அருளப்பாவும் தெய்வநாயகம் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல்தான் “பேரின்ப விளக்கு”.இதில் திருவள்ளுவர் தாமஸிடம் ஞானஸ்நாநம் பெற்றதாக எழுதியுள்ளனர்.அந்நூலில் சொல்லப்பட கருத்துக்களுக்கு ஆதாரம் தேடத்தான் ஜான் கணேஷை அருளப்பா தேர்ந்தெடுத்தார். தெய்வநாயகம் என்பவர் இந்துவாக இருந்து மதம் மாறிய தீவிர கிறிஸ்தவர்.அவர் தமிழ்ச் சமய இலக்கியங்களில் தனக்குத்தோன்றியபடி கிறிஸ்தவக்கருத்துக்களைக் கண்டுபிடிக்க முனைந்தார். 1986-ல் “விவிலியம்-திருக்குறள்-சைவ சித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு”என்ற ஆய்வு நூலுக்காகச் சென்னைப் பல்கலைய்கழகம் தெய்வநாயகத்துக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இந்த ஒப்பாய்வு நூலில் விவிலியக்கருத்துக்களிலிருந்தே திருக்குறள் உருவான தென்றும் சைவ சித்தாந்தத்தில் உள்ள கருத்துக்கள் கிறிஸ்தவக்கருத்துக்களே என்றும் கூறப்பட்டுள்ளது.இது தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள சைவ மக்களை மதம் மாற்றுவதற்கான ஒரு யுக்தி.இந்தத் திருக்குறள் அபகரிப்பு விஷயத்துக்கும் சைவ சித்தாந்த அபகரிப்பு விஷயத்துக்கும் அடித்தளமிட்டுக்கொடுத்தவர் G.U.போப் தான்.
பொதுவாகக் கிறிஸ்தவர்கள் முதலில் மற்றவர்களின் மதக்கருத்தைக் கடுமையாக விமர்சிப்பார்கள்.அந்த விமர்சனங்களுக்கு சம்பந்தபட்டவர்கள் தக்க பதிலடிகொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிட்டால் அப்படியே பல்டியடித்துத் தாங்கள் விமர்சித்த மதக்கருத்தைச் சிறந்த கருத்துக்களாக ஏற்றுக்கொண்டு அவற்றைக் கிறிஸ்தவ மயமாக்கிவிடுவார்கள். அதாவது அந்த மதக்கருத்து விவிலியத்திலிருந்துதான் வந்தது என்று கூறிவிடுவார்கள்.இதுதான் கிறிஸ்தவர்களின் வழக்கம். ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் சைவ சித்தாந்தத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள்.உதாரணமாக 1841-ல் இலங்கையில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பு நடத்திவந்த “Morning Star” என்ற பத்திரிகை(இது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வரும் இரு மொழிப்பத்திரிகை.) சைவ மதத்தையும் சைவர்களையும் தாறுமாறாகத் தாக்கி எழுதியது.சைவம் மனிதனை ஒழுக்கத்துடன் வாழவைக்காது என்றும்,சைவர்கள் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள்,பொய்யர்கள், ஏழைகளைக் கொடுமைப்படுத்துபவர்கள், அகங்கரம் பிடித்தவர்கள் என்றும் அந்தப் பத்திரிகை எழுதியிருந்தது.மேலும் சைவம் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் சிறந்த விஷயம் எதுவும் இல்லை என்றும் கிறிஸ்தவ நெறிகளுக்கு இணையாக அதில் எதுவும் இல்லை என்றும் இலங்கை மிஷினரிகள் கூறிவந்தனர்.சைவத்தின் மீதான இந்தக் கடுமையான தாக்குதல் கிறிஸ்தவரளின் எதிர்பார்ப்புக்கு நேர் மாறான எதிர்வினையையே உருவாக்கியது. இலங்கைவாழ் தமிழ்ச்சைவ அறிஞர்கள் இந்த மிஷினரிகளின் தாக்குதல்களுக்குத் தக்கபதிலடி கொடுத்தனர்.விவிலியத்தை எழுத்தெண்ணிப்படித்த சிறந்த சைவ அறிஞரான ஆறுமுக நாவலர் சைவத்தின் உயர்வையும் விவிலியத்தில் உள்ள குறைபாடுகளையும் மிஷினரிகள் உணரும் வகையில் தெளிவாக விளக்கினார்.அதற்குப்பிறகுதான் மிஷினரிகள் தங்கள் நிலைப்பட்டை மாற்றிக்கொண்டு சைவத்தை எதிர்ப்பதைவிட கிறிஸ்தவத்துக்குள் அதை செரிக்க வைப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து அந்த முயற்சியில் இறங்கினர்.அதற்காகவே G.U.போப் சைவ பக்தி இலக்கியங்கள் மீது கைவைத்தார்.அவர் முதலில் எடுத்துக்கொண்ட சைவ நூல் திருவாசகம்.இந்த நூலை ஆழ்ந்து படித்து இதன் பெருமையை வெளிப்படுத்துவடுதுபோல் “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்றெல்லாம் கூறி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.உடனே இங்குள்ள தமிழர்களுக்கு எல்லையற்ற சந்தோஷம். “ஒரு அந்நியன் பாருங்கள், நம் சமய நூலைப் படித்துவிட்டு அதன் பெருமையைப்புரிந்துகொண்டு அவன் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறான்.இதுதான் திருவாசகத்தின் பெருமை”என்று தங்களுக்குள் புளகாங்கிதம் அடைந்தனர். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் கூடத் தமிழ் வளர்த்த ஆங்கிலேயர் வரிசையில் போப் புகழப்பட்டிருந்தார்/புகழப்படுகிறார். அவரது சொல்லான “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”என்ற வசனம் பள்ளிப்பாடங்களில் இன்னும் இடம்பெறுகிறது.இன்றும் தமிழர்கள் போப்பிற்கு நன்றி கூறுகின்றனர்.
ஆனால் போப்பின் நோக்கத்தை அவரைப்பாராட்டும் நம்மவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை.தனது திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் “தாவீதின் கீதங்கள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எப்படியோ அப்படித்தான் சைவர்களுக்கு இந்தத் திருவாசகம்.ஹீப்ரூ புனிதநூல்கள் முதல் இன்றைய கிறிஸ்தவப்பாடல்கள் வரை மொத்த ஐரோப்பிய உன்னதப்பாடல்களையும் தமிழ் நாட்டில் உள்ள அறிஞர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.” என்று எழுதியிருக்கிறார்.இதிலிருந்து என்ன தெரிகிறதென்றல் கிறிஸ்தவ நூலை விடத் திருவாசகத்தை அவர் ஒன்றும் பெரிதாக எண்ணிவிடவில்லை என்பது தெரிகிறது.அவரது உள்நோக்கமும் புரிகிறது.
போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பை மிஷினரிகளுக்குக் காட்டி சைவத் திருமுறைகளின் முக்யத்வத்தை விளக்கினார்.வேத மரபிற்குத் தொடர்பில்லாத மதம் சைவம் என்றும் அதுவே பழந்தமிழர்களின் மதம் என்றும் சில விஷயங்களில் கிறிஸ்தவத்துக்கும் அதற்கும் ஒற்றுமை இருக்கிறது என்றும் போப் விளக்கினார்.கிறிஸ்தவர்கள், “கிறிஸ்தவம் ஒன்றுதான் உலகில் தோன்றிய உன்னதமான சிறந்த மதம்.உலகில் உள்ள மற்ற மதங்களெல்லாம் கிறிஸ்தவத்திற்குப்பிறகு தோன்றியவை.அவற்றில் ஏதாவது நல்ல அம்சங்கள் இருந்தால் அவை கிறிஸ்தவத்திலிருந்து பெறப்பட்டவையே.”என்ற கருத்தை உறுதியாக மனதில் வைத்துக்கொண்டுதான் மற்ற மதங்களின் மீது தங்களின் பார்வையை வைப்பார்கள்.தங்கள் கருத்துக்கு ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. “எந்த வகையிலாவது” தம் கருத்தை நிலை நாட்டிவிடவேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் அவர்கள்.சைவமே ஆதித்தமிழர் சமயமென்று சொல்வது சைவத்தை இந்துத்தன்மையிலிருந்து நீக்குவதற்காக. அதில் உள்ள சில கூறுகள் கிறிஸ்தவத்தோடு ஒத்துப்போவதாகக் கூறுவது எளிமையாக சைவர்களை மதம் மாற்ற.
போப் தமிழ் நூல்களில் தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றிக்கூறும்போது அவை விவிலத்தோடு பொருந்தியிருப்பதாகக் கூறுவார்.தனக்குப்பிடிக்காத விஷயங்களைப் பற்றிப் பேசும்போது பிராம்மண ஆதிக்கத்தால் வந்த மூட நம்பிக்கைகள் அவை என்று சொல்லிவிடுவார்.போப்பின் இந்த நிலைப்பாட்டையே பின்னால் வந்த மிஷினரிகள் எடுத்துக்கொண்டு அதற்கேற்றபடி செயல்பட ஆரம்பித்தனர்.-தொடரும்
நன்றி ; Saravanaprasad Balasubramanian