Saturday 3 November 2018

jagadeeshkri@gmail.com

நோயின்றி வாழ...
உயிரினங்களுக்கு உணவே பிரதானம். எதை உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதில்தான் உடலுக்கு வலுவும் நோவும் வருகிறது. இந்த எளிய உண்மையை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். இது தொடர்பான தெளிவான தீர்வுகள் நம்மிடம் ஏராளமாய் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உணராது உடலையும், உயிரையும் வருத்திக் கொள்கிறோம் என்பது நகைமுரண்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கருத்தினை வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும், அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

உடலுக்கு ஒத்து வராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. இதையும் வள்ளுவ பெருந்தகை நறுக்கென சொல்லியிருக்கிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம் மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

இத்தனை தெளிவான வரையறையை என்றைக்கோ நம் முன்னோர்கள் தீர்மானமாய் சொல்லியிருந்தாலும் இதன் தெளிவுகள் நம்மில் பலருக்கும் தெரியாதவை., அத்தகைய சில நோயணுகா விதிகளை தொகுப்பதே இன்றைய பதிவின் நோக்கம். தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்ட தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன். பாடல்களை பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.

தேரையர் அருளிய நோயணுகா விதிகள்.

மலசலங்களை அடக்காமலும், பெண் போகத்தை விரும்பாமலும், உண்ணும்போது காய்ச்சிய நீரையும், பசுமோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உண்பவர்கள் பேரைச் சொன்னாலே வியாதிகள் நீங்கிவிடும் என பொது விதியாக சொல்கிறார்.

மேலும்...

பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை  உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.

பகலில் உறங்குவதும், தன்னை விட வயதில் மூத்த மாதரை சேர்வதும், இளவெயிலில் உலவுவதும், மலசலங்களை அடக்குவதும், சுக்கிலத்தை அடுத்தடுத்து விடுவதும் உடலுக்கு தீமையைக் கொடுக்கும் என்கிறார்.

இடதுகையை கீழாக வைத்து படுப்பதும், புளித்த தயிரை உண்பதும், பெண்களுடன் மாதத்திற்கு ஒருதடவை மட்டுமே சேர்வதும் உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

மூல நோயை உண்டாக்கும் பதார்த்த வகைகளை தவிர்க்க வேண்டும். முதல் நாள் சமைத்த கறியை ஒரு போதும் உண்ணக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் உண்பதும், உணவு உண்டதும் பகலில் உறங்குவதும், பசிக்காது உணவு உண்பதும் உடலுக்குத் தீமையைக் கொடுக்கும்.

மிகுந்த தாகம் உண்டானாலும் உணவு உண்ட பின்னரே நீர் அருந்த வேண்டும். அதன் பின்பு அருந்தக் கூடாது. உணவு உட்கொண்ட பின்னர் சிறிது தூரம் நடத்தலும். ஒன்றரை மாதத்திற்கு ஒருதடவை நசியஞ் செய்துக் கொள்வதும், மாதத்திற்கு நான்கு தடவைகள் சவரஞ்செய்து கொள்வதும், மூன்று நாட்கொரு தரம் கண்களுக்கு மையிட்டுக் கொள்வதும் நன்மையை கொடுக்குமாம்.

கருணைக்கிழங்கைத் தவிர மற்றய எந்த கிழங்குகளை உண்பதும், நள்ளிரவில் கஸ்தூரி முதலிய வாசனாதி திரவியங்களையும், பூக்ககளையும் பயன்படுத்துவதும், பெண்கள் நடக்கும் போது பறக்குந் தூசி நம் மீது படும்படி நெருங்கிச் செல்வதும் தீமையைக் கொடுக்குமாம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மரங்களின் நிழல் இவைகளில் தங்குவது கூடாதாம், உட்கொண்ட உணவு  சீரணிக்கும் காலத்தில் புணர்ச்சி செய்வதும், நகத்திலிருந்து தெறிக்கும் நீரும், தலை முடியில் இருந்து தெறிக்கும் நீரும் நம்மீது படுமாறு அவைகள் தெறிக்கும் இடத்தில் இருப்பதும் தீமையைக் கொடுக்கும்.

மாலை நேரத்தில் உணவு உண்பதும், உறங்குவதும், மலசலம் கழித்தலும், புணர்வதும், அழுக்கேறிய ஆடைகளை நீக்குவதும், தலை சீவுவதும் தீமையைக் கொடுக்கும். மேலும் இந்த மாலை நேரத்தில் பசுவையும், முன்னோர்களையும், குருவையும் வணங்கி நிற்பது நன்மையைத் தருமாம்.

இத்தகைய நியதிகளை கடைப்பிடித்து வாழ்பவர்கள் இருக்கும் இடத்தில் எமனுக்கு வேலை ஒன்றும் இருக்காது என்கிறார் தேரையர்.

எளிய விதிகள்தானே, யாரும் பின்பற்றலாம். நவீன மருத்துவமும் தற்போது இத்தகைய கருத்துக்களையே முன்மொழிகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
By
K. Jagadeesh

No comments:

Post a Comment